மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் மாதா , பிதா , குரு , தெய்வம் ஆகியோர் ஆசீர்வாதங்களை பெறும் வகையில் இன்று ஆசிர்வாத திருநாள் விழா பள்ளியில் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கல்வி கடவுள் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாத பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து வரிசையாக நின்று அனைத்து ஆசிரியர்களிடமும் மலர் தூவி ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா மற்றும் பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை கொடுத்து அருள் ஆசி வழங்கினார். அப்போது மாணவர்களின் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முத்தமிட்டு ஆசிர்வாதம் வழங்கி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.