மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் பழமையான வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. காவேரி ஆற்றின் கிளை நதியான வீரசோழன் ஆற்றின் கரையில் ஒருபுறம் வெள்ளை நிற இலைகளும், மறுபுறம் அடர் பச்சை நிறத்தில் உள்ள இலைகளும் உள்ள வெள்ளை வேம்பு மரத்தடியில் மாரியம்மன் எழுந்தருளி இருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும். இதனால் இந்த அம்மன் வெள்ளை வேம்பு மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இவ்வாலயத்தின் 67-ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவினை முன்னிட்டு பால்குடம் மற்றும் காவடி உற்சவம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலய குளக்கரையில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பால்குடம் எடுத்தும் 20 அடி நீளம் அலகு குத்தியும், பால்காவடி, பன்னீர்காவடி எடுத்தும் மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
இதில் இரண்டு வயது மதிக்கத்தக்க ரோகித் என்ற பாலகன் நெற்றியில் குண்டூசி குத்தி தனது தாயார் உதவியுடன் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்து பக்தி பரவசமடைய செய்தது. தொடர்ந்து பாலகனுக்கு களைப்பு ஏற்பட்டதால் பாதி வழியிலேயே தூங்கி வழிந்த நிலையில் பாலகனின் தாயார் மற்றும் பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இருப்பினும் பாலகனை தாய் பாசத்துடன் அரவணைத்து கோவில் வரை தூக்கிச் சென்று நேர்த்திக்கடனை செலுத்தினார். அன்னையர் தினத்தில் தாய் பாசத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது. தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலினாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்கிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.