சீர்காழி அருகே சித்தர்புரத்தில் அமைந்துள்ள 18 சித்தர்களின் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் பீடத்தின் நிறுவனர் நாடி ராஜேந்திரன் சுவாமிகளின் 6-ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் பீடம் உள்ளது. இந்த பீடத்தில் மாதம் தோறும் பௌர்ணமி நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் பீடத்தின் நிறுவனர் நாடி ராஜேந்திரன் சுவாமிகளின், குருபூஜை விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அவ்வகையில் ஒளிலாயம் பீடத்தின் நிறுவனர் நாடி ராஜேந்திரன் சுவாமிகளின் 6-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு பீடத்தின் வளாகத்தில் ஆறுபடை வீடு முருகப்பெருமானின் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர், பார்வதி, பரமசிவன் மும்மூர்த்தி அலங்காரம் செய்யப்பட்டு உலக நன்மை வேண்டி, சிறப்பு மகா யாகம் நடைபெற்றது.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஒளிலாயம் பீடத்தில் நடைபெற்ற மும்மூர்த்தி மகா யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அன்னதானம் மற்றும் பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மயிலாடுதுறை அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் VGK.செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ பி.வி.பாரதி, அதிமுக அமைப்பு செயலாளர் ஆசைமணி, முன்னாள் எம்எல்ஏ சக்தி, ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம் ரவிச்சந்திரன், பொறியாளர் மார்கோனி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எம்.ஆர்.எஸ்.சங்கர், சீர்காழி அதிமுக முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, வழக்கறிஞர்கள் நெடுஞ்செழியன், தியாகராஜன், பாலாஜி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நாடி செல்வ முத்துக்குமரன், நாடி செந்தமிழ்ச்செல்வன், நாடி மாமல்லன், நாடி பரதன் மற்றும் குடும்பத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.