இ-டென்டர் முறையில் நிதி ஒதுக்கப்படுவதால், வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை: எஸ்எஃபி ஃபண்ட் ஏஜிஎம்டி பணிகளுக்கு ஒதுக்கப்படுவதால் நிதிப்பற்றாக்குறை:- மயிலாடுதுறையில் நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு. மயிலாடுதுறை வட்டாரத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாகவும் தகவல்.
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்து பேசினர்.
இதில் பேசிய திமுக உறுப்பினர் காந்தி, மயிலாடுதுறை ஒன்றியத்தில் அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் இ-டெண்டர் முறையிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால், மயிலாடுதுறை ஒன்றிய பொதுநிதியில் கடந்த ஓராண்டாக எந்த ஒரு வளர்ச்சிப் பணிக்கும் நிதி ஒதுக்கப்படாததால், குடிநீர், சாலைவசதி உள்ளிட்ட கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் சந்தோஷ்குமார், மாநில அரசிடமிருந்து மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு (எஸ்.எஃப்.சி ஃபண்ட்) ரூ.1.23 கோடி ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், தற்போது ரூ.63 லட்சம் அளவிலேயே ஒதுக்கப்படுகிறது. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், முதலமைச்சர் திட்டம் போன்ற பிற பணிகளுக்கு மாநில அரசால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதி பிரித்து வழங்கப்படுவதன் காரணமாகவே ஒன்றிய பொது நிதியில் தட்டுப்பாடு நிலவுகிறது என குற்றம்சாட்டி பேசினார். பின்னர் மயிலாடுதுறை வட்டாரத்தில் டெங்கு பாதிப்பு குறித்து பேசிய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கர் கூறுகையில், மயிலாடுதுறையில் கடந்த ஒரு வாரமாக தினசரி 2 புதிய டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி மயிலாடுதுறை வட்டாரத்தில் 10 பேர் டெங்கு பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு உடனடியாக சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகளும், காய்ச்சல் தென்படும் மக்களிடம் ரத்த பரிசோதனை செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.