உத்திர பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட கருப்பு தினத்தை முன்னிட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறையில் பல்வேறு விவசாய இயக்கங்கள் ஒன்றிணைந்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்:-
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட கருப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பொன்.நக்கீரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, சிஐடியு, ஏஐசிசிடியு, எல்டியுசி, ஐஎன்டியுசி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
விவசாயி கொலைக்கு காரணமான மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது வழக்குப் பதிந்து பதவியில் இருந்து நீக்க வேண்டும், மின்சாரத் திருத்த சட்ட மசோதாவை கைவிட்டு, தொழிலாளர் நல சட்டங்களை திருத்தியதை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் பல்வேறு சங்கங்களின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.