சீர்காழி அருகே தனியார் மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்து, டிரைவர் உள்ளிட்ட 11 பேர் காயம் - மருத்துவமனையில் சிகிச்சை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கடைக்கண் விநாயகநல்லூர், மாங்கனாம்பட்டு வழியாக தனியார் மினி பஸ் இயக்கப்படுகிறது. சீர்காழியில் இருந்து புறப்பட்டு கொள்ளிடம் நோக்கி சென்ற மினி பஸ் கடைக்கண் விநாயகநல்லூர் பகுதி வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதியுள்ளது. விபத்தில் பஸ் டிரைவர் பழையபாளையத்தை சேர்ந்த கபிலன் 35, பயணிகள் கமலி, புனிதவள்ளி, சங்கீதா உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.
இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.