சீர்காழி அருகே புளிச்சக்காட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிலம்பாட்ட மாணவர்கள் சார்பில் வீர விளையாட்டு உபகரணங்களுக்கு சிறப்பு வழிபாடு. கிராமம், கிராமமாக சென்று மரபு கலையை இலவசமா பயிற்றுவிக்கும் இளைஞரின் முயற்ச்சிக்கு பொதுமக்கள் பாராட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயியான இளைஞர் தினேஷ். விவசாயம் செய்வதோடு ஓய்வு நேரங்களில் கிராமம், கிராமமாக சென்று தமிழர்களின் வீரவிளையட்டு மரபு கலைகளை இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.
மாணவர்களின் விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றவும், அழிவின் விளிம்பில் உள்ள தமிழர் மரபு கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்களின் கிராமத்திற்கே சென்று தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க துவங்கிய தினேஷ் தற்போதும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மரபு கலைகளை இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.
இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு சீர்காழி அருகே புளிச்சக்காடு கிராமத்தில் ஒன்றினைந்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிலம்பக்கலை மாணவ – மாணவிகள் தங்களது வீரவிளையாட்டு உபகரணங்களுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து கிராம மக்கள் முன்னிலையில் பல்வேறு வீரவிளைட்டுகளை நிகழ்த்தி காட்டினர்.
3 வயது சிறுவர்கள் முதல் 20 வயது கல்லூரி மாணவர்கள் வரை கலந்து கொண்டு நடுகம்பு, நெடுகம்பு, அலங்காரகம்பு, இரட்டைகம்பு, குத்துவரிசை, அருவாள்வீச்சு, வாள்வீச்சு, பிச்சுவாகத்தி, வேல்கம்பு, கட்டைக்கால், சுருள் வாள்வீச்சு என பல்வேறு வீரவிளையாட்டுகள் மற்றும் தற்காப்பு கலைகள் பொதுமக்களுக்கு செய்துகாட்டினர் இதனை சுற்றியிருந்த பெற்றோர் மற்றும் கிராமமக்கள் மாணவ – மாணவிகளை கைத்தட்டி உற்சாகபடுத்தினர்.
செல்போன், தொலைக்காட்சி என மாறிவரும் இன்றய இளைய தலைமுறையினர்கள் மத்தியில் இந்த மரபுவழி தற்காப்புக்கலை கற்றுக்கொள்ளுவதால் மாணவர்களுக்கு மனவலிமையையும், உடல் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறிய கிராமமக்கள் இளைஞர் தினேஷ்குமாரின் முயற்ச்சியை பாராட்டி வருகின்றனர்.