அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது, முடக்கப்பட்ட அகவிலை தொகை, சரண்டர் விடுப்பு தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக திமுக கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது.
மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை இதனை கண்டித்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டுப் போராட்ட குழுவான ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது அதன்படி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மயிலாடுதுறை கச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர். ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.