தேமுதிக தலைவரும், முன்னாள் எதிா்க்கட்சி தலைவர் மற்றும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28-ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக காலமானாா். அவரது மறைவிற்கு திரைப்படத்துறையினர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் கடைவீதியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் நினைவை போற்றும் வகையில் அமைதி பேரணி நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவரும், பரசலூர் ஒன்றிய கவுன்சிலருமான கே.எஸ்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.ஜலபதி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு செம்பனார்கோவில் கீழ முக்கூட்டில் இருந்து மேல் முக்கூட்டு வரை பேரணியாக வந்து கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உருவ படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர்தூவி ஆரத்தி எடுத்து மௌனஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.