உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தினை தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் வருகை புரிந்தனர். வைத்தீஸ்வரன்கோயில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இடுபொருட்கள், விதைகள் தங்கு தடை இன்றி கிடக்கிறதா என்பதை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வைத்தீஸ்வரன்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள மாணவ- மாணவிகள் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது மக்களை சந்தித்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
சீர்காழி பனங்காட்டங்குடி பகுதியில் வசிக்கும் ஒன்பது குடும்பத்தினர் தங்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாமல் பிள்ளைகளின் மேற்படிப்பை தொடர முடியவில்லை என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதனை ஆய்வு செய்து 9 குடும்பங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிட வட்டாட்சியரிடம் அறிவுறுத்தினார். மேலும் பட்டா மாற்றம், குடும்ப அட்டை போன்றவற்றிற்கு பொதுமக்கள் அளித்த மனுக்களை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து நேற்று ஒரு நாள் சீர்காழி பகுதியில் மாவட்ட ஆட்சியர் தங்கி சட்டநாதபுரம், சீர்காழி, தென்பாதி, செம்மங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று நியாய விலை கடை, ஆரம்ப சுகாதார நிலையம், இ-சேவை மையம், கூட்டுறவு நகர வங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆதிதிராவிடர் நல விடுதி, முதியோர் இல்லம், பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக இந்த பகுதிகளில் அனைத்து துறை அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் பெற்று அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்பதே ஆகும் எனவே சீர்காழி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களை தேடி வரும் அலுவலர்களை சந்தித்து தங்களுக்கு உண்டான குறைகளை தெரிவித்து உடனடி தீர்வை தேடி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்த பட்டுள்ளது.