தங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் முன்னாள் மாணவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை விடுத்து ரூ.2 லட்சம் நிதி வழங்கி அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்

செய்திகள்

மயிலாடுதுறை அருகே ஆறுபாதி கிராமத்தில் தாங்கள் படித்த அரசுப்பள்ளிக்குத் தேவையான இடம், ரூ.45 லட்சம் செலவில் வகுப்பறை கட்டிடம், கலையரங்கம், சுற்றுச்சுவர் ஏற்படுத்தித் தந்து, பள்ளியின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் முன்னாள் மாணவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை விடுத்து ரூ.2 லட்சம் நிதி வழங்கி அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆறுபாதி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆறுபாதி அரசு தொடக்கப் பள்ளியாக இருந்த காலத்தில் இருந்து இப்பள்ளியின் பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

தொடக்கப்பள்ளியில் படித்த லைட் தங்கராசு என்பவர் தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக ஒன்றேகால் ஏக்கர் இடத்தை தானமாக வழங்கி உள்ளார். மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விளநகர் கணேசன் முயற்சியால் நடுநிலைப்பள்ளியாகவும், பின்னர் 2006-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் படித்து பெங்களூரில் தொழிலதிபராக உள்ள ராமகிருஷ்ணன் என்பவர் பள்ளிக்கு சுற்றுச்சுவர், கலையரங்கம், ரூ.28 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளார்.

 

மேலும், அவர் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட கணினி ஆசிரியருக்கு கடந்த 13 வருடங்களாக மாதம் ரூ.5000 சம்பளம் வழங்கி வருகிறார். பள்ளிக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ள முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அழகு பார்க்க நினைத்து கடந்த 2014 -ஆம் ஆண்டு அரசுக்கு ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்திவிட்டு காத்திருக்கின்றனர். இந்நிலையில் மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஆலோசனை கூட்டம் பள்ளியில் நடைபெற்றது. ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். கோயில் இடத்தில் உள்ள இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு தேவையான இடத்தை பெற்றுதர தயாராக உள்ளதாகவும், 262 மாணவர்கள் பயிலும் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி வருவதாகவும், உடனடியாக பள்ளிகல்வித்துறை உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *