மயிலாடுதுறை மாவட்டத்தில் பதனீர் இறக்கும் தொழிலை செய்யக்கூடாது என காவல்துறை அதிகாரிகள் மிரட்டுவதாக நாடார் மக்கள் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, அப்பேரவையின் நிறுவனர் ஏ.பி.ராஜா அளித்த புகார் மனுவில், பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பதனீர் இறக்குவது, பனை வெல்லம் தயாரிப்பது போன்றவை சட்டபூர்வமான செயல்கள். பதனீர் சாலையோரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர் என்பதால் தமிழக அரசு பதனீர் இறக்கி விற்பனை செய்ய அனுமதி மற்றும் உரிமம் வழங்கியுள்ளது.
ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் தங்கள் உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கினால்தான் பதனீரை இறக்கி விற்பனை செய்யலாம். அதனை மீறி பதனீர் இறக்கினால் கடுமையான வழக்குப் போடுவோம் என மிரட்டுகின்றனர். எனவே, பதனீர் இறக்கும் தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் இடையூறு ஏற்படுத்தாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் அவர் வலியுறுத்தினார். அப்போது, சங்க நிர்வாகிகள் மற்றும் பதனீர் இறக்கும் தொழிலாளர்கள் உடன் இருந்தனர்.