அட்டவீரட்ட தலங்களில் சிவபெருமான் மன்மதனை எரித்த கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோற்வத்தையொட்டி தேர் திருவிழா இன்று நடைபெற்றது. பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட பிரம்மோற்சவம் 80 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த ஆண்டு கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு மோம நிலைக்கு சென்றதால் உலகம் வெப்பமாகியது. இதை உணர்ந்த தேவர்கள், முருகப்பெருமானிடம் முறையிட்டனர். ஆனால் முருகனோ தந்தையின் தவத்தை கலைக்க என்னால் முடியாது என்று சொல்ல, மன்மதனிடம் சென்று சிவனின் தவத்தை கலைக்க கோரியதன் பேரில் சிவனின் தவத்தை கலைக்க சென்றார். சிவனின் மீது தன் மன்மத அம்பை எய்து சிவனின் தவத்தை கலைத்தார். கடும் கோபம் கொண்ட சிவன் தன் தவத்தை கலைத்த மன்மதனை தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். இந்த ஐதீக நிகழ்வு மாசி மாத பௌர்ணமி தினத்தில் சிவன் காமதகனமூர்த்தியாக எழுந்தருளி சம்ஹாரம் செய்யும் ஐதீக திருவிழாவாக மயிலாடுதுறை கொற்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீஞானாம்பிகை உடனாகிய வீரட்டேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டனர். பின்னர், தருமபுரம் ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கிராமமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.