மயிலாடுதுறையில் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அணி, மாணவரணி உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராகவும், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுத்து இளைஞர்களை பாதுகாக்க கோரியும், போதைப் பொருள் வழக்கில் தேடப்பட்டு வரும் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர்சாதிக்கை கைது செய்ய வலியுறுத்தியும் அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர். மேலும் திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர்.