மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர பொதுக்குழுக் கூட்டம் நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் சிறப்புரையாற்றினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், தஞ்சாவூர் மண்டல பொறுப்பாளர் ஐயப்பன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், மயிலாடுதுறை நகராட்சியில் நீண்டகால பிரச்னையாக உள்ள பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும், கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் குடிநீர் பற்றாக்குறையை நீக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, மயிலாடுதுறை நகரில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தை போலீஸார் துரித நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு கட்டுப்படுத்தத் தவறினால் 10 நாள்களுக்குள் மயிலாடுதுறையில் போலீசாரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் தஞ்சாவூர் மண்டல பொறுப்பாளர் ஐயப்பன் தெரிவித்தார்.