இந்தியாவில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை சந்திக்க இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் முனைப்புடன் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் அண்மையில் புதிதாக நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் கட்சி தொடங்கினார். மக்களவைத் தேர்தலை சந்திக்கப் போவதில்லை என்றும் அடுத்த சட்டப்பேரவை தேர்தலே இலக்கு என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் இப்போது இருந்தே தயாராக தொடங்கியுள்ளனர். தமிழக வெற்றி கழகத்தில் முதற்கட்டமாக கீயூ ஆர் கோடு மூலம் ஆன்லைனில் கட்சியில் உறுப்பினர்களை இணைத்து வருகிறார்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு வருங்கால இளைஞர்களை தங்கள் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்கும் முயற்சியாக உறுப்பினர் சேர்க்கை முகாமை மாவட்ட தலைவர் குட்டி கோபி தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து களம் இறங்கியுள்ள கட்சியினர் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளிடையே whatsapp மற்றும் telegram க்யூ ஆர் கோடு அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்பொழுது க்யூ ஆர் கோடை பயன்படுத்தி புதிய உறுப்பினர்களையும் கட்சியில் இணைத்தனர். இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.