மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 17 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு. சுயேட்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம், பானை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.

செய்திகள்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 17 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு. சுயேட்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம், பானை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு. சுயேட்சை வேட்பாளர்கள் விட்டுக் கொடுத்து மாற்று சின்னம் பெற்றனர்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு 30 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு 13 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இன்று வேட்புமனுக்களை  வாபஸ் பெற அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் எந்த வேட்புமனுக்களும் வாபஸ் பெறப்படாததால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 17 பேர் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

தேர்தல் பொது பார்வையாளர் கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி வேட்பாளர்களுக்கு  சின்னங்களை வரிசையாக ஒதுக்கீடு செய்து வந்தார். அப்போது சுயேட்சை வேட்பாளர்களில் நாகராஜன் என்பவருக்கு  கரும்பு விவசாயி சின்னமும், சிலம்பரசன் என்பவருக்கு பானை சின்னமும் ஒதுக்கீடு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு நாம் தமிழர் கட்சி மற்றும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு வேறு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு வழங்கப்பட்ட நிலையில் அந்த சின்னத்தை சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். 

இதேபோல் திமுக கூட்டணி கட்சியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம் ஒதுக்குவதற்கு திமுக ஒன்றிய செயலாளர் முருகமணி எதிர்ப்பு தெரிவித்தார். அதனை தொடர்ந்து கட்சியினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இரண்டு சுயேட்சை வேட்பாளர்களும் விட்டுக்கொடுத்து வேறு சின்னங்களில் போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவித்து எழுதி கொடுத்ததால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 17 வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுக, பாமக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் அவர்களுக்கு உரிய சின்னத்திலும்  நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்திலும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன. தொடர்ந்து பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *