மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை சின்னகடைவீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் தொடர்ந்து விவசாயிகளுக்கு நன்மை செய்து வந்தோம். 2016-இல் ஜெயலலிதா கூறியதுபோன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். கொரோனா காலத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.12,110 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்தோம். விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தந்தோம். அதையும் தற்போது நிறுத்திவிட்டனர். நான் இப்போதும் விவசாயம் செய்து வருகிறேன். எனவே, விவசாயிகள் கஷ்டங்கள் என்ன என்பது எனக்கு புரியும். செல்வ செழிப்பில் வாழ்ந்த மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகளின்; கஷ்டங்கள் புரியாது. காவிரி நதி நீர் பிரச்னைக்காக நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தியவர் ஜெயலலிதா. அவரது வழியில் தொடர்ந்து போராடி 50 ஆண்டுகால விவசாயிகளின் பிரச்னைக்கு நான் முதலமைச்சராக இருந்தபோது தீர்வு ஏற்படுத்தித்தந்தது எனது அதிமுக அரசு. கர்நாடக அரசு மாதந்தோறும் 177.2 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுத்தந்தேன். அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத திராணியற்ற முதமைச்சராக உள்ளார் மு.க.ஸ்டாலின்.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை. 2023-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டதைத் தொடர்ந்து, தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஐந்தரை லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால், கர்நாடக அரசுக்கு மு.க.ஸ்டாலின் உரிய அழுத்தம் தராத காரணத்தால் நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இங்கே குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் வாடும் நிலையில், இந்தியா கூட்டணி கூட்டத்துக்காக பெங்களூரு சென்ற மு.க.ஸ்டாலின் கர்நாடகா அமைச்சர்களை சந்தித்தபோது காவிரி நீர் பற்றி எதுவும் பேசவில்லை. அவருக்கு டெல்டா விவசாயிகளைப் பற்றியும் கவலையில்லை. தமிழக மக்களைப் பற்றியும் கவலையில்லை. அவரது கவலை எல்லாம் மத்தியில் ஆட்சி அதிகாரம் மட்டுமே.
மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக வாழாமல் தங்கள் வீட்டு மக்களுக்காக வாழ்கிறார். மக்களின் மீது அக்கறை இல்லாத பொம்மை முதலமைச்சராக செயல்படுகிறார். இவரை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால்கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது. காஞ்சிபுரம் மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தபோது மக்கள் கேட்டார்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுகடைகள் மூடுவேன் என்று கூறுனீர்கள் என்று கேட்டபோது. அப்போது உதயநிதி எதிரே இருந்த திமுககாரர்களை பார்த்து நீங்கள் திமுகவிற்கு ஒட்டுபோட்டீர்களா என்று கேட்கிறார். பிரச்சாரத்தில் இருப்பவர்கள் திமுக காரர்கள் என்பது கூட தெரியாமல் இருக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர். திமுகவில் இருப்பவர்களையே நம்பாதவர் உதயநிதி. கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன் வானம்கிழித்து வைகுண்டம் போன கதையாக ஸ்டாலின் கதை உள்ளது. தமிழக மக்களை பாதுகாக்கவில்லை.
காவிரி நதிநீர் பிரச்சனை உச்சநீதிமன்றத்துக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் அளித்த சட்ட தீர்ப்பை அமல்படுத்த பாஜக அரசு காலம் கடத்தியபோது, நாம் அக்கூட்டணியில் அங்கம் வகித்ததையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களின் நலன் கருதி, உச்சநீதிமன்ற தீர்ப்பை விரைந்து நிறைவேற்ற வேண்டி அதிமுக மக்களவை உறுப்பினர்கள் 22 நாள்கள் மக்களவையை ஒத்திவைத்து, மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி முறைப்படுத்தும் குழு அமைக்க வழிவகுத்தோம். அதிமுக ஆட்சி இருந்தவரை மேகதாட்டுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியவில்லை. தற்போது திமுக ஆட்சி நடைபெறும் நிலையில் தில்லியில் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய நீர்வளத்துறைக்கு அனுப்பியுள்ளனர். டெல்டா மாவட்டம் பாலைவனமாகி விடாமல் தடுக்க, தனியார் தொழிற்சாலைகள் வராத வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியது அதிமுக. மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது திமுக அரசு. அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு. விவசாயிகள் பாதிக்கப்படும் போதெல்லாம் கை கொடுக்கும் அரசாக அதிமுக அரசு இருந்தது. சென்னை கூட்டத்தில் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என்று ஸ்டாலின் பேசினார். எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது காங்கிரஸ்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் கூறியதும் இந்தியா கூட்டணியில் இருந்தவர்கள் பலர் பிரிந்து செல்கின்றனர். கேரளாவில் கம்யூனிஸ்ட் காங்கிரஸசை. எதிர்த்து போட்டியிடுகிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கம்யூ. கட்சி கூட்டணியில் இருக்கிறது, இவர்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது. திமுக அரசின் ஊழல் குறித்து கவர்னரிடம் புகார் அளித்தோம் அவர் விசாரிக்கவில்லை. அப்படி விசாரித்திருந்தால் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வந்திருக்கும். அதிமுக ஆட்சியின் போது திமுகவினர் கவர்னரிடம் புகார்கொடுத்தார் அப்போது கவர்னர் நல்லவராக தெரிந்தார். தற்போது கெட்டவராக தெரிகிறார். திமுகவிற்கும், கவர்னருக்குமிடையே சில பிரச்னை இருக்கிறது எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. பாஜவிற்கு எடப்பாடி பயப்படுகிறார் என்று கூறுகிறார். அதிமுக காரங்கள் யாருக்கும் பயப்படுபவர்கள் இல்லை. எம்ஜிஆர் பயிற்சி பட்டறையில் படித்த மாணவர்கள் அதிமுகவினர் தமிழக மக்களுக்கு பிரச்னை வந்தால் அதனை உடைக்க பாடுபடுவோம். கூட்டணியில் இருந்தவரை கூட்டணி தர்மத்தை கடைபிடித்தோம். உங்களை போல் கூட்டணியில் இருந்துகொண்டு உள்ளடி வேலை பார்ப்பது இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை கொடுத்து இணைந்து பணியாற்றுவோம். அதிமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கக்கூடிய கட்சி. உங்கள் கூட்டணியில் இருக்கிறவர்கள் எப்படி மன்றாடி சீட் வாங்கினார்கள் என்பது தெரியும். மயிலாடுதுறை லோக்சபா தொகுதி வேட்பாளர் ஒருநாள் முன்புதான் அறிவித்தார்கள். அதிமுக மக்களுக்காக போராடுகின்ற கட்சி என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிந்துகொள்ள வேண்டும்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பலகோடி மதிப்பீட்டில் தடுப்பணை, கதவணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக நிறைவேற்றித் தந்துள்ளது. அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது, மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டம் அமைத்துத் தந்தேன். நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு நீ (மு.க.ஸ்டாலின்) பெயர் வைத்துள்ளாய். நாங்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு நீ ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருக்கிறாய். அதிமுக ஆட்சியில் புதிய மாவட்டத்தை உருவாக்கி அதற்கான கட்டடத்தை நாங்கள் தந்தோம். அண்மையில் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த அக்கட்டடம் நாங்கள் தந்தது. பூம்புகாரில் மீன்பிடித் துறைமுகம், மீன் இறங்குதளம், மீனவர்கள் வலைகளை பாதுகாக்க கட்டடம் என ரூ.360 கோடி மதிப்பீட்டில் கொண்டு வந்தது அதிமுக. தரங்கம்பாடியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித்துறை துறைமுகம், ஆதனூர்-குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.450 கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய பாலம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நிறைவேற்றித் தந்தது அதிமுக அரசு என்றார்.