மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு சென்ற வேட்பாளருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி தரிசனம் செய்து பரப்புரையை தொடங்கிய வேட்பாளர் ம.க.ஸ்டாலின் திருக்கடையூர், தில்லையாடி, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் புடைசூழ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணி கட்சியினர் வேட்பாளருக்கு மாலை அணிவித்து மலர் கிரிடம் வைத்தும் பெண்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து தில்லையாடி பகுதிக்கு சென்று தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு மண்டபத்திற்கு சென்று வள்ளியம்மை மற்றும் காந்தியடிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திறந்த வெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மயிலாடுதுறை – காரைக்கால் இடையே இரயில் சேவை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகுதலை தடுப்பதற்கு தடுப்பணை அமைக்கப்படும். மருத்துவக் கல்லூரி, சட்டம் மற்றும் வேளாண் கல்லூரி அமைக்கப்படும். தமிழர்களை பெருமைப்படுத்தும் வகையில் டெல்லியிலிருந்து திருச்சி வரை செங்கோல் எக்ஸ்பிரஸ் என்ற புதிய இரயில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். இது போன்று மயிலாடுதுறை தொகுதி வளர்ச்சிக்கு எந்தெந்த திட்டங்கள் தேவையோ அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்து பரப்புரை மேற்கொண்டார். இதில் பாமக, பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.