மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் புது புது யுக்திகளை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக வேட்பாளர் பாபு திறந்தவெளி வாகனத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடை சூழ தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருக்கடையூர் பகுதியில் உள்ள வீரம்மா காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கோவிலின் அருகே உள்ள ஒரு பூக்கடைக்கு சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அந்த பூக்கடையில் பூ வாங்க வந்தவர்களுக்கு பூவை முழம் போட்டு விற்பனை செய்து வாக்கு சேகரித்தார். கடைக்கு வந்த ஒருவர் கடையில் இருந்த வேட்பாளர் பாபுவிடம் ஒரு மாலையை வாங்கி அந்த மாலையை வேட்பாளர் பாபுவின் கழுத்தில் அணிவித்தது அனைவரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து டி.மணல்மேடு, கிள்ளியூர், மாணிக்கபங்கு, பிள்ளைப் பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வேட்பாளருக்கு கட்சியினர் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.