மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இளையாளூர் ஊராட்சியில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளையாளூர் ஊராட்சி புதுத்தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு குடியிருப்பு வீட்டு மனை பட்டா வழங்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தேர்தல் போது அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பதற்காக வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நாங்கள் வெற்றிப்பெற்ற உடன் செய்து தருவதாக கூறி பலமுறை வாக்குறுதி அளித்தாகவும் அதன்பிறகு இப்பகுதி பக்கம் வருவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே எங்கள் பகுதிக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவிக்கின்றனர். அதன்படி முதற்கட்டமாக வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டியும், கையில் கருப்பு கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தங்களுக்கு குடியிருப்பு வீட்டு மனை பட்டா வழங்காத தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும், எங்கள் பகுதிக்கு வேட்பாளர்கள் யாரும் வாக்கு சேகரிக்க வர வேண்டாம் எனவும், எங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.