மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் கூறைநாடு செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாடியதை பார்த்ததாக சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக காட்டுத்தீ போல் செய்தி பரவியதால் அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பகுதியில் சோதனை செய்தபோது சிறுத்தையின் கால் தடம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததன் பெயரில் உடனடியாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினருக்கு போலீசார் தகவல் அளித்தனர்.
வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடம் என்று உறுதி செய்ததால் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய மயிலாடுதுறை மையப்பகுதியில் சிறுத்தை சுற்றி வருவது அனைவரிடமும் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.