மயிலாடுதுறையில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் வேட்பாளர்கள், கட்சிக்காரர்கள் பள்ளிவாசல்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட இளையாளூர் ஊராட்சி அரங்கக்குடியில் உள்ள முஹையித்தீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையை முடித்து விட்டு வெளியே வந்தனர்.
அப்போது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபு விற்கு ஆதரவாக அதிமுகவினர் பள்ளிவாசல் முன்பு திரண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கபடிபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் துண்டு பிரசுரங்களை வழங்கியும், மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கியது மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கியது உள்ளிட்ட அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கிக் கூறியும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.