மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிறுத்தையின் புகைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். தொடர்ந்து 22 கிலோமீட்டர் சிறுத்தை இடம்பெயர்ந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லையான குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் மற்றும் கருப்பூர் பகுதிகளில் நடமாடியது. சிறுத்தையின் கால் தடம் மற்றும் சிறுத்தையின் எச்சம் கண்டறியப்பட்டது. கடந்த 3 நாட்களாக சிறுத்தையின் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் மயிலாடுதுறையை ஒட்டியுள்ள தஞ்சை திருவாரூர் மாவட்ட எல்லைகளிலும் கூண்டுகள் வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று இரவு 7.30 மணி அளவில் மயிலாடுதுறை புறநகர் அருகே நல்லத்துக்குடி ஊராட்சி அடியமங்கலம் பகுதி பழைய பயன்பாடற்ற ரயில்வே தடத்தில் உள்ள தார் பிளாண்டில் பணியாற்றும் ஹரிஹரன் மற்றும் சிலர் சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில் வனத்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு இரவில் கண்காணிக்க கூடிய தெர்மல் ட்ரோன் மூலம் சோதனை இட்டனர்.
சிறுத்தையின் கால் தடம் எனக் கூறப்படும் சந்தேகத்துக்கு இடமான கால் தடத்தை ஆய்வு செய்தனர். இந்நிலையில் இன்று காலை டி23 சிறுத்தையை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் காலன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மரத்தின் மேலே இருந்து சிறுத்தை கீழே குதித்து பாய்ந்து சென்றதாக கூறப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டதில் சிறுத்தை மரத்தின் மீது ஏறியதற்கான தடயங்கள் எதுவும் இல்லை, கால் தடமும் உறுதி செய்யப்படவில்லை. சிறுத்தையை நேரில் பார்த்தவர்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அப்பகுதியில் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எட்டாம் தேதிக்கு பிறகு சிறுத்தையின் தடயங்கள் எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து பொதுமக்கள் அளிக்கும் தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தரிவித்தனர்.