மயிலாடுதுறை ரயிலடி ஆபத்துதாரண ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பாலாஜி பட்டாச்சாரியார் குரோதி ஆண்டின் பஞ்சாங்க பலன்களாக நிகழாண்டில் மழை குறைவும், அதன் காரணமாக விளைச்சல் குறைவும் ஏற்படும் என்ற பொதுப்பலனை வாசித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு புதிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவர், குப்பைக்கழிவுகளில் இருந்து புதியவகை வைரஸ் காய்ச்சல் உருவாகும். அந்த பிரச்னைக்கு மருத்துவ துறையினர் இந்த ஆண்டிலேயே தீர்வு காண்பார்கள்.
மின்சார கட்டணம் குறையும், பத்திரிக்கைதுறை பின்னடைவை சந்திக்கும். லஞ்ச வழக்குகளில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழ்நாடு காவல்துறை நவீன வளர்ச்சிகளால் சிறப்படையும். பிரபலங்கள் அரசியல் கட்சியை தொடங்கி அதில் பின்னடைவு ஏற்படும். மக்களவைத் தேர்தலில் பழைமைவாய்ந்த மக்கள் செல்வாக்கை பெற்ற கட்சி ஆட்சி பீடத்தில் அமரும். உலக வங்கி இந்தியாவில் கருப்புப்பணம் வைத்திருப்போரின் விபரத்தை பகிரங்கமாக அறிவிக்கும். மக்கள் செல்வாக்கை பெற்ற பிரபலங்கள் அதில் வெளிப்படுவார்கள்.
சீனாவில் அத்துமீறல் அதிகரிக்கும். இதனால் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கும். பிறந்த குழந்தை பேசும் அதிசயம் நடைபெறும். திருடர்களின் பயம் அதிகமாக இருக்கும். பழம்பெரும் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க நேரிடும் என்றார்.