கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இக்கால கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம், ஏப்ரல் 15-ம்தேதி இன்றுஅதிகாலை முதல் அமலுக்கு வந்தது. ஜூன் 14-ம் தேதி வரையில் 61 நாட்கள் இந்த தடைக்காலம் நடைமுறையில் இருக்கும்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சின்னூர் பேட்டை முதல் சந்திரபாடி, தரங்கம்பாடி, குட்டியாண்யூர், பெருமாள் பேட்டை, மாணிக்கபங்கு, சின்னங்குடி, வாணகிரி, பூம்புகார், கூழையார், திருமுல்லைவாசல், தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் வரை உள்ள 28 கிராம மீனவர்கள் இன்று முதல் 61 நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும், தங்களது 400 விசைப்படகுகள் மற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை நங்கூரமிட்டு பாதுகாப்பாக துறைமுகங்கள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், இந்த மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்கள் விசை படகுகளை வர்ணம் பூசி, பழுதுபார்க்கும் பணி மற்றும் வலைகளை சீரமைக்கும் பணிகளிலுக்கு ஆயுத்தமாகி வருகின்றனர்.