மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் ஸ்ரீஉத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது. திருமணத்தடை உள்ளவர்கள், நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பல்வேறு சிறப்புகளையுடைய இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கி இன்று நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் அருள்மிகு கல்யாண சுந்தரர் பட்டு உடுத்தி ருத்ராட்சமாலை உள்ளிட்ட திருஆபரணங்கள் அனிந்து காசி யாத்திரைக்கு திருஎதிர்கொள்படி எழுந்தருளல் நிகழ்ச்சியில் ஸ்ரீ கோகிலாம்பாள் எதிர்கொண்டு அழைத்து மாலை மாற்றும் வைபவமும், பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமி அம்பாளுக்கு பாலால் காலை பட்டாடையால் துடைத்து, பச்சைபுடி சுற்றி பெண்கள் நலுங்கிட்டனர். தொடர்ந்து ஹோமம் வளர்க்கப்பட்டு கன்னிகாதானம் செய்யப்பட்டது. பின்னர் பட்டாடை சாத்தப்பட்டு திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது. பின்னர் பூரணாகுதி செய்யப்பட்டு சுவாமி அம்பாளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு அலங்கார தீபம் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர்.