மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் ஊராட்சி குளத்தூரில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி திரௌபதி திருக்கல்யாணம், அல்லி சுபத்திரை திருமணம், அர்ஜுனன் தபசு நாடகம், அரவான் களப்பலி நாடகம், கூந்தல் முடிதல் பாஞ்சாலி படுகளம் ஆகிய விழாக்கள் நடத்தப்பட்டன. திருவிழாவில் சிகர விழாவான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது.
இதில் காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மஞ்சள் நிற உடை உடுத்தி பாண்டூர் பிடாரி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்து, கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிலர் உடல் முழுவதும் அலகு குத்தி காவடி எடுத்து வந்தது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.