மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த புகழ்பெற்ற ஸ்ரீ ஆலடி வலஞ்சுழி விநாயகர் கோவில், விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில், கெங்கையம்மன் கோவில் ஆகிய ஐந்து திருக்கோவில்கள் புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 18-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை உடன் தொடங்கி 20-ஆம் தேதி யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூரணஹூதி செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில்களை சுற்றி வளம் வந்து விமான குடும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பனர்கள் வேதங்கள் ஓத ஐந்து கோவில்களின் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.