ஐயாரப்பர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு சமயக்குறவர்களுக்கு சிவாலயங்களில் இருந்து சாமிகள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி.

செய்திகள்

மயிலாடுதுறை ஐயாரப்பர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு சமயக்குறவர்களுக்கு சிவாலயங்களில் இருந்து சாமிகள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஐயாரப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் நாதசன்மா, அனவித்தை ஆகிய சிவபக்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்புக்குரியதாகும். இவ்வாலயத்தில் திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழா போன்று ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சப்தஸ்தான பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சப்தஸ்தான பெருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று ஏழுர் சுவாமிகள் எழுந்தருளும் சப்தஸ்தான திருவிழா நடைபெற்றது.

 திருஇந்தளுர் தான்தோன்றீஸ்வரர், சோழம்பேட்டை அழகியநாதர் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டதால் ஐந்து ஊர் சாமிகள் மட்டும் விழாவில் எழுந்தருளினர். முன்னதாக, ஐயாரப்பர் ஆலயத்தில் இருந்து ஐயாரப்பர் பஞ்சமூர்த்திகளுடன், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர், கூறைநாடு புனுகீஸ்வரர், சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர், மயிலாடுதுறை மாயூரநாதர் ஆகிய 5 ஆலயங்களின் சுவாமிகளுடன் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் எழுந்தருளி சமயக்குறவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு காட்சி கொடுக்கும் உற்சவம் நடைபெற்றது.

அங்கு அனைத்து சுவாமிகளுக்கும் திருவாவடுதுறை ஆதினம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் பட்டு அணிவித்து வழிபாடு செய்தார். பின்னர் மஹா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை பக்தர்களை பரவசபடுத்தியது. தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *