தலைமை காவலரை காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் நான்கு பேருக்கு ஏககால ஆயுள் தண்டனை. மயிலாடுதுறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

செய்திகள்

சாராயம் கடத்தி வந்த போது துரத்திச் சென்று வழிமறித்த காவல்துறை தலைமை காவலரை 2012-ஆம் ஆண்டு காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் நான்கு பேருக்கு ஏக கால ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு, குற்றவாளிகளை காப்பாற்ற ஆள்மாறாட்டம் செய்து கோர்ட்டில் ஆஜரான இரண்டு பேருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் விதித்த நீதிபதி :-

மயிலாடுதுறை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொப்பியம் என்ற பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு நான்கு பேர் காரில் சாராயம் கடத்தி சென்றனர். அப்போது காரை வழிமறித்த நடமாடும் சோதனை சாவடி பிரிவை சேர்ந்த போலீசார் குழுவினர் மீது  சாராயம் கடத்தி வந்த கும்பல் காரை நிறுத்தாமல் விட்டு மோதியது. அப்போது இருச்சகர வாகனத்தில் வந்து காரை வழிமறித்த  தலைமை காவலர் ரவிச்சந்திரன் மீது காரை ஏற்றினர். இதில் மார்பு எலும்புகள் உடைந்து படுகாயம் அடைந்த தலைமை காவலர் ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் இந்த கொலை வழக்குத்தொடர்பாக மீன்சுருட்டியை சேர்ந்த காரை ஓட்டிய கலைச்செல்வன், சங்கர், ராமமூர்த்தி, திருவிடைமருதூர் புளியம்பட்டியை சேர்ந்த கருணாகரன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சாராய விற்பனை செய்த கலைச்செல்வனையும் கருணாகரனையும் காப்பாற்றும் முயற்சியாக ஆள் மாறாட்டம் செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் ஆஜராகினர். இவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டறியப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

21 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவலரை கொலை செய்ததால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் வாதிட்டார்.  குற்றவாளிகள் என்று நேற்று தீர்ப்பளித்த நீதிபதி விஜயகுமாரி இன்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதங்களையும் எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு விபரங்களை இன்று வெளியிட்டார். கொலை குற்றம் சாட்டப்பட்ட முதல் நான்கு பேருக்கும் ஏககால ஆயுள் தண்டனை விதித்தும் ரூபாய் 2 ஆயிரம் அபதாதம் விதித்தும் அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறைதண்டனை வழங்கினார்.

குற்றவாளிகளை காப்பாற்ற ஆள்மாறாட்டம் செய்த செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும் ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். குறற்வாளிகள் அனைவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *