மயிலாடுதுறையில் வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு கூட்டம் மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர், ஆடிட்டர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு, வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ஜிஎஸ்டி வரிஏய்ப்பு செய்பவர்கள் குறித்த விவரங்களை ஆர்டிபிஸியல் இன்டலிஜென்ஸ் வாயிலாக கண்டறியும் நடைமுறைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வியாபாரிகள் வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
20 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் (டர்ன்-ஓவர்) இருந்தால் மட்டும் ஜிஎஸ்டி செலுத்தினால்போதும் என ஜிஎஸ்டி விதிகள் வரையறுத்துள்ளது. இதனைமீறி குறைந்த அளவு முதலீட்டுக்காக வங்கிக்கடன் கேட்டு அணுகும் புதிய தொழில் முனைவோரை ஜிஎஸ்டி பதிவு செய்ய வங்கிகள் கட்டாயப்படுத்துவது தவறு. வங்கிகள் கட்டாயப்படுவதன் காரணமாக வேறு வழியின்றி தொழில் முனைவோர் ஜிஎஸ்டி பதிவு செய்துவிட்டால், விற்றுமுதல் ஒரு ரூபாயாக இருந்தால் கூட கட்டாயம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இவ்வாறு வங்கிகள் தொழில் முனைவோரை கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை வணிகர் சங்கங்கள் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.
நாம் செலுத்த வேண்டிய வரியை குறைப்பதற்காக, வெறும் இன்வாய்ஸ் மட்டும் பெற்றுக்கொண்டு அதற்கான பொருள்களை பெற்றுக்கொள்ளாததே பேக் இன்வாய்ஸ் எனப்படுகிறது. இதைப்பற்றி தெரியாமல் வணிகர்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது. எந்த நிலையிலும் வியாபாரிகள் பேக் இன்வாய்ஸை ஊக்குவிக்கக் கூடாது என்றார். இதில், ஏராளமான வியாபாரிகள் மற்றும் ஆடிட்டர்கள், டாக்ஸ் பிராக்டீஸ்னர்கள் கலந்துகொண்டனர்.