மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடும் அவதி. நிறுத்தப்படவுள்ள மயிலாடுதுறை – காரைக்குடி ரயிலை தொடர்ந்து இயக்கவும் கோரிக்கை:-

செய்திகள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடும் அவதி. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் மயிலாடுதுறையிலிருந்து நிறுத்தப்படவுள்ள மயிலாடுதுறை - காரைக்குடி ரயிலை தொடர்ந்து இயக்கவும் கோரிக்கை:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையம் உட்பட நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்து புதுப்பிக்கும் பணிகள் பிரதமர் நரேந்திர மோடியால் காணோளி காட்சி வாயிலாக துவங்கி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய சந்திப்பு விரிவாக்க பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கிய நிலையில் மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக இத்துடன் சேர்த்து துவக்கப்பட்ட மற்ற ரயில் நிலையங்களில் கட்டிடங்கள் எழுப்பப்பட்ட நிலையில் மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் மட்டும் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருகிறது.

இதனால் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை கடந்து ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்வதும், ரயிலில் இருந்து இறங்கி வருபவர்கள் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வருவதும் சவால் நிறைந்த பயணமாக இருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் கட்டுமான பணி நடைபெறும் பகுதிகளை கடந்து வரும் பொழுது தடுமாறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர். அப்பகுதியை கடந்து செல்ல முடியாத நிலையில் மாற்று வழியில் சென்றால் அதிக தூரம்  சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மயிலாடுதுறை ரயில் நிலைய விரிவாக்கம் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மயிலாடுதுறையிலிருந்து தினந்தோறும் பாரம்பரியமாக இயக்கப்பட்டு வந்த மயிலாடுதுறை – காரைக்குடி சென்று வருகின்ற ரயிலை திருவாரூரில் இருந்து இயக்கப்போவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை சுற்றியுள்ள பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவே பாரம்பரியமாக இயக்கப்பட்டு வந்த மயிலாடுதுறை – காரைக்குடி ரயிலை தொடர்ந்து மயிலாடுதுறையிலிருந்து இயக்க வேண்டும் எனவும் பயணிகள் சங்கம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *