மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 39-ஆம் ஆண்டு உழைப்பாளர் தின விழா அச்சங்கத்தின் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் தலைமையில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் முதல் ஏராளமானோர் சிலம்பம் சுற்றி அசத்தினர். அப்போது ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி இளைஞர் விமல் என்பவர் ஒற்றைக் கையால் சிலம்பம் சுற்றி அசத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து பொதுத் தொழிலாளர் சங்கத்தின் கொடியினை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் அவர் ஒரு கையால் சிலம்பம் சுற்றிய மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சால்வை அணிவித்து தனது பாராட்டினை தெரிவித்தார்.