மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி ஆலயமானது அமைந்துள்ளது. இங்கு திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர், சட்டைநாதர், தோனியப்பர் தனிச் சன்னதியில் அருள்பாளித்து வருகின்றனர். இன்று குரு பெயர்ச்சி முன்னிட்டு சட்டைநாதர் கோவிலில் சுவாமி சன்னதிக்கு தெற்குப்பகுதியில் அருள் பாலித்து வருகின்ற மேதா தெட்சினாமூர்த்தி சுவாமி சன்னதியில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கடங்களை கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து மேதா தெட்சினாமூர்த்தி சுவாமிக்கு மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், தேன், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
புனித நீர் அடங்கிய கடங்களை கொண்டு மேதா தெட்சினாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேதா தெட்சினாமூர்த்திக்கு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மாலை 05:19 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பிரவேசித்தார். இதனை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ராசி உடையவர்கள் பரிகார பூஜைகள் செய்து குரு பகவானை வழிபாடு மேற்கொண்டனர்.