தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செய்திகள்

தரங்கம்பாடி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் தேவஸ்தானம் ஓட்டங்காடு கிராமத்தில் மிகவும் பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மாராசுரனை அழித்து மக்களை காத்தருளிய அம்பிகை இத்தளத்தில் கத்தி, கபாலம், உடுக்கை, சூலம், ஜவாலாகேசத்துடன் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் அம்பிகையை மனம் உருக பிரார்த்திப்பவர்களின் குறைகளை அகற்றி சகல நன்மைகளையும் அருள்வார் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த அம்பிகை சுற்று வட்டாரத்தில் உள்ள 8 கிராம மக்களின் குலதெய்வமாக வணங்கி வருகிண்றனர். இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 29-ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் கடந்த 30-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளும் தொடங்கின இன்று  ஆறாம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து, பூர்ணாஹுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்து மேள தாள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர். முதலில் அருகில் உள்ள அய்யனார் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா மாரியம்மன் கோவில் விமான கலசங்களில் வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *