மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள நல்லத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் மின்வாரியத் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெரம்பூர் பகுதியில் இருந்து கடக்கம் வழியாக நல்லத்துக்குடி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கடக்கம் பாலம் அருகே மது போதையில் இருந்த நான்கு இளைஞர்கள் மகாலிங்கத்தை வழிமறித்து தாக்கி அவர் அணிந்திருந்த மூன்று பவுன் ஜெயின், செல்போன் மற்றும் 2000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து மகாலிங்கம் செய்வதறியாமல் பெரம்பூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் நாகவல்லி தலைமையிலான போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு மோட்டார் கொட்டகையில் இளைஞர்கள் பதுங்கி இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். போலீசாரை கண்டதும் போதையில் இருந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். தப்பி ஓடிய இளைஞர்களை போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் முடிவில் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது மயிலாடுதுறை சோழசக்கநல்லூர் பகுதியை சேர்ந்த சுல்தான் (20), மயிலாடுதுறை சேர்ந்த அபிநாத்(19), மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து மகாலிங்கத்திடம் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட மூன்று பவுன் செயின், 2000 ரூபாய் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், சுல்தான்(20), அபிநாத்(19) ஆகிய இரண்டு பேரையும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொறையார் கிளை சிறையில் அடைத்துள்ளனர். 17 வயது சிறுவர்கள் இரண்டு பேரையும் தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். வழிபறிச் சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குள்ளேயே குற்றவாளிகளை கைது செய்த பெரம்பூர் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.