மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்தது. தொடர்ந்து வெப்ப அலை வீசிய நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக் கொட்டி தீர்த்தது. திடீரென காற்றுடன் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள தரங்கம்பாடி , செம்பனார்கோவில் , பொறையார் , பெரம்பூர் , குத்தாலம் , நீடூர் , வில்லியநல்லூர் , மல்லியம் , மணல்மேடு , மங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறிது நேரம் மழை கொட்டி தீர்த்தது. மேலும் இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து மயிலாடுதுறை பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.