மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 1,07,435 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெறும். இந்நிலையில் 38,441 ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெறவுள்ளது. தற்போது, முற்பட்ட குறுவை நெற்பயிர்கள் சுமார் 30 முதல் 40 நாள் பருவத்தில் விளைந்துள்ள நிலையில், விவசாயிகள் களைக்கொல்லி தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுவாக விவசாயக் கூலி தொழிலாளர்களைக் கொண்டு களைக்கொல்லி மருந்து தெளிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு மருந்து செலவுடன் சேர்த்து ரூ.700 வரை செலவாகிறது. நாளொன்றுக்கு ஒரு விவசாய கூலித்தொழிலாளி 3 ஏக்கர் வரை களைக்கொல்லியை தெளிப்பார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வைகல் கிராமத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ ஃபவுண்டேஷன் சார்பில் ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிக்க ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் வேரின் அடி பகுதி வரை மருந்து செல்வதால் களைகள் முற்றிலுமாக அழியும். பெருவிவசாயிகளின் நிலங்களுக்கு 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய ட்ரோன் மூலமும், சிறு விவசாயிகளுக்கு 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளித்துத் தரப்படுகிறது. ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிப்பதால், கால விரயம் தவிர்க்கப்படுவதுடன், செலவும் குறைவதால் வைகல் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் நாட்டம் காட்ட தொடங்கி உள்ளனர்.