மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழநெப்பத்தூர் கிராமத்தில் மெகா கிரீட் ஓல்ட்ராஸ் என்று தனியார் நிறுவனம் சோலார் பவர் பிளான்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு கிராமத்தைச் சேர்ந்த சிலர் நிறுவனத்திற்கு ஆதரவாகவும் பெரும்பான்மையானோர் எதிர்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் நிரந்தர தீர்வு எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின்பு நிரந்தர தீர்வு காணப்படும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று கீழநெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சி.பி.ஐ.எம்.எல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தனியார் சோலார் பவர் பிளான்ட் அமைக்கும் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தனியார் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும், சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விரைவில் மக்களை திரட்டி மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவது என கூட்டத்தின் முடிவில் தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.