மயிலாடுதுறை மாவட்டம் முருகமங்கலம் கிராமத்தில் பால மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரை பெருவிழா கடந்த ஐந்தாம் தேதி பந்தகால் முகூர்த்தத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அபிஷேக ஆராதனை மற்றும் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காவேரி கரையில் இருந்து அம்மனுக்கு உகந்த மஞ்சள் நிற உடை உடுத்தி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.