மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். கோயில் மூலவர் திருவிக்ரம நாராயணன் பெருமாள் தனது இடது காலை வான் நோக்கி தூக்கியவாறு காட்சி தருகிறார். மூலவர் பெருமாளின் வலது பாதத்தை ஆண்டுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவிக்கிரம நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சணம், சாத்துமுறை நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே பெருமாள் எழுந்தருள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவ கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திரு விக்ரமநாராயண பெருமாள் மேள தாளத்துடன் கோயிலை வலம் வந்து உற்சவம் மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக 16-ம் தேதி தங்க கருட சேவையும், 19-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. விழா இன்று தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது.