அரசு கலைக் கல்லூரிக்குள் புகுந்து ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரியை மடக்கி பிடித்த பேராசிரியர்கள் போலீஸிடம் ஒப்படைப்பு.

செய்திகள்

சீர்காழி அருகே புத்தூர் எம் ஜி ஆர் அரசு கலைக் கல்லூரிக்குள் புகுந்து ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரியை மடக்கி பிடித்த பேராசிரியர்கள் போலீஸிடம் ஒப்படைப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பிற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பி.பி.ஏ., பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கில இளங்கலை பட்ட படிப்பு தேர்வு இன்று மதியம் நடைபெற்ற நிலையில் 300 மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது கல்லூரி முதல்வர் அறைக்குள் வந்த நபர் தன்னை பறக்கும் படை அதிகாரி என கூறி தேர்வு எழுதக்கூடிய மாணவர்களை தான் சோதனை செய்ய வேண்டுமென கூறி என்னை தொடர்ந்து வாருங்கள் என்று கூறி பேராசிரியர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாக சென்று தேர்வு எழுதும் மாணவர்களை ஆய்வு செய்தார்.

பின்னர் அலுவலர்கள் அமர்ந்திருக்கும் அறைக்கு வந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்தார். அந்த நபருக்கு அங்குள்ள பேராசிரியர்கள் வரவேற்று காபி மற்றும் இனிப்பு வழங்கினர். அதனைத் தொடர்ந்து அவரை கல்லூரி பொறுப்பு முதல்வர் முரளி மற்றும் ஆசிரியர்கள் அவரிடம் சற்று நேரம் பேசிகொண்டிருந்த பொழுது அவர் மீது ஆசிரியர்களுக்கு சந்தேகம் எழ அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் போலி அதிகாரி என்பது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்த தேர்வு கட்டுப்பட்டு அலுவலர் குமார் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் சேர்ந்து  அந்த நபரை பிடித்து அறைக்குள்ளேயே தங்க வைத்தனர். இது குறித்து கொள்ளிடம் போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து  வந்த கொள்ளிடம் காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தபோது அவர் கொள்ளிடம் அருகே உள்ள காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பார்த்திபன்(27) என்பதும் அவர் ஆங்கிலம் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இவர் ஏன் இப்படி போலி பறக்கும்படை அதிகாரியாக கல்லூரிக்குள் புகுந்தார். இதன் பின்னணி என்ன என்று பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி அறைக்குள் புகுந்த போலி பறக்கும் படை அதிகாரியால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *