மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட மாட்டாது:- பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராமமக்கள் அளித்த கோரிக்கை மனுவை ஏற்று உடனடியாக உறுதியளித்த மாவட்ட ஆட்சியர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் ஊராட்சி காவிரி கரையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பிரதான சாலையில் புதிதாக தொடங்க உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை தடுத்து நிறுத்தகோரியும் சேத்திரபாலபுரம், அரையபுரம், கடலங்குடி மற்றும் தொழுதலாங்குடி ஆகிய 4 கிராம மக்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கபடும் சூழல் உள்ளதால் இங்கு புதிய டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சேத்திரபாலபுரம், அரையபுரம், கடலங்குடி மற்றும் தொழுதலாங்குடி ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சேத்திராபாலபுரம் பகுதியில் புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஏற்கெனவே டாஸ்மாக் கடை உள்ளதா அல்லது புதிதாக திறக்கப்பட உள்ளதா என்பதை அதிகாரிகள் மற்றும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார். கடை புதியதாக திறக்கப்பட உள்ளது என்பதை அறிந்ததும், உடனடியாகவே கிராம மக்களிடம் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உத்தரவாதம் அளித்தார். ஆட்சியரின் உடனடி உத்தரவால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.