மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளாலகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடியில் ஏராளமான குதிரைகள் சாலையை மறித்து நின்று போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், மயிலாடுதுறை- சிதம்பரம் பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலையில் உள்ளது. அப்பகுதியில் வாழும் பொதுமக்களும் நடந்து செல்வதற்கே அச்சமடைகின்றனர்.
குறிப்பாக குதிரைகள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டு திடீரென சாலைகளில் ஓடுவதால் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகும் ஆபத்து நிலவுகிறது. இந்த சாலை வழியாக எவ்வளவோ அரசு வாகனங்கள் கடந்து சென்றாலும் அதிகாரிகள் யாரும் இதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சாலையில் சுற்றித் திரியும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும், குதிரைகளை கால்நடை பட்டிகளில் அடைத்தும் விபத்து நேரிடாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.