பொதுமக்களிடம் இணைய வழி மூலம் பல்வேறு அரசு நலத்திட்டங்களை போலியாக பயன்படுத்தி பரிசு விழுந்திருப்பதாகவும், பண பரிவர்த்தனை செயலி மூலம் பெற்றுக்கொள்ள ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டும் போலியான திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு எனக்கூறி பொதுமக்களை சிலர் ஏமாற்றி வருகின்றனர். லோன் ஆப், இணையவழி திருமண தகவல், நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகளில் இணையவழி வாயிலாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் இருந்து தற்பொழுது வரை 900 புகார்கள் வரப்பெற்று 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.78 லட்சம் பணத்தை புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் முடக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் அதிகரித்துவரும் இணையவழி குற்றங்களை கட்டுப்படுத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்பேரில் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 5,000 விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவசங்கர் தலைமையில் இணையவழி குற்றப்பிரிவு போலீஸார், போக்குவரத்து காவல்துறையினர் உதவியுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், அரசு பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் இணையவழியை கவனமாக கையாளுமாறும், பிரச்சாரம் செய்தனர். இணையவழி குற்றம் பற்றி உடனடியாக புகார் தெரிவிக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் இணையவழி குற்றப்பிரிவு எண்ணான 9345881636 என்று எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.