மயிலாடுதுறை அறுபத்து மூவர்பேட்டை பகுதியை சேர்ந்த சிலம்பரசன் மனைவி ஜெயந்தி(25). இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளியான இவர், சிறுவயது முதல் டீ வியாபாரம் செய்து சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை திருமணத்தின் போது திரும்பத் தருவதாக கூறி அதே பகுதியை சேர்ந்து சிலர் ரூ.3 லட்சம் வரை வாங்கியுள்ளனர். ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற போது பணத்தை திருப்பிக்கேட்டபோது யாரும் பணத்தை திரும்ப கொடுக்க முன்வரவில்லை.
இது குறித்து பலமுறை அவர்களிடம் கேட்டும் எந்த பதிலும் இல்லாததால் ஜெயந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஆனால் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கடந்த 13-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளார். விசாரனை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பிவைத்தனர். அதன் பிறகும் இது நாள் வரை நடவடிக்கை இல்லாததால் விரக்தி அடைந்த ஜெயந்தி இன்று மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகம் முன்பு தனது கணவருடன் சென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த எஸ்.பி மீனா மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து மாற்றுத்திறனாளியான ஜெயந்தியிடம் குறையை கேட்டறிந்தார். அங்கிருந்த காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி மற்றும் காவல் ஆய்வாளரிடம் இவரை ஏமாற்றியவர்களிடமிருந்து பணத்தை உடனடியாக பெற்று தர அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளி பெண்ணான ஜெயந்தி அளித்த புகரில் குறிப்பிட்டிருந்த நபர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். எஸ்.பியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் இடையே பாராட்டு குவிந்துவருகிறது.