தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.10-ஆம் நாள் விழாவான இன்று ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தருமபுரம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை பக்தர்கள் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சுமந்து செல்ல, மூன்று யானைகள், ஒட்டகம், குதிரை ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல, ஆதீனத் திருக்கூட்டத்து அடியவர்களுடன் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார்.
ஞானபிரகாசர் பெருவிழாவின் சிகர நிகழ்வாக 11-ஆம் நாளான நாளை தருமபுரம் ஆதீனகர்த்தரை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து தங்கள் தோலில் சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு நாளை இரவு 9 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞானகொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.