இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அபிராமி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு பாலாலயம் நடைபெற்றது:-

செய்திகள்

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் ராஜராஜ சோழனால் கருங்கல் திருப்பணி செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அபிராமி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு பாலாலயம் நடைபெற்றது:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கல்லணை-பூம்புகார் சாலையில் சோழம்பேட்டை கிராமம் அமைந்துள்ளது. ஒரு ஆடி அமாவாசை தினத்தன்று மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மனை வழிபடுவதற்காக வந்த சோழமன்னன் ராஜராஜசோழன் கடும் மழை வெள்ளம் காரணமாக பயணத்தை தொடர முடியாமல் இந்த கிராமத்தில் தங்கினார். இதனால், இக்கிராமம் சோழன்பேட்டை என பெயர்பெற்றது.

மழைவெள்ளத்தால் குறித்த நேரத்தில் திருக்கடையூர் அபிராமி அம்மனை வழிபட முடியாமல் போனதால் மனம் வருந்திய ராஜராஜசோழன், அந்த கிராமத்தில் இருந்த சுயம்பு லிங்கமான தான்தோன்றீஸ்வரர் சுவாமி சிலை முன்பு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டதாவும், அப்போது அம்பாள் நேரில் எழுந்தருளி ராஜராஜனுக்கு காட்சி அளித்ததால் அதே இடத்தில் அபிராமி அம்மன் மற்றும் தான்தோன்றீஸ்வரருக்கு ராஜராஜ சோழன் கருங்கல் திருப்பணி செய்து கோயில் கட்டியதாக இக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் கடைசியாக 2001-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிடப்பட்டு, அதற்காக பாலாலயம் எனப்படும் திருப்பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதற்காக கோயில் பிரகாரத்தில் யாகம் வளர்க்கப்பட்டு, மகா பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், கோயில் வளாகத்தில் அடிக்கல் நாட்டி திருப்பணி தொடங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *