மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட 195 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைக்கப்பட்டன. மயிலாடுதுறையில் இந்து முன்னணி சார்பில் 25 விநாயகர் சிலைகள் கோலாகலமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்று பூம்புகார் கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பல்வேறு கோயில்களில் 195 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக 3 நாட்கள் வைக்கப்பட்டன. மயிலாடுதுறையில் மாயூரநாதர் கீழவீதியில் அம்மையப்பன் விநாயகர், மற்றும் காமதேனு விநாயகர், வீர விநாயகர், கற்பக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பக்தர்களை கவரும் வகையில் விநாயகர் சிலைகள் பல்வேறு கோவில்களில் வைக்கப்பட்டிருந்தன.
இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைக்கப்பட்டன. மயிலாடுதுறை சுற்று வட்டாரப்பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட 25 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் கோலகலமாக நடைபெற்றது. அருணா பெட்ரோல் பங்க் அருகில் தொடங்கிய விநாயகர் ஊர்வலத்தை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தொடங்கி வைத்தார்.
மின்னொளியால் அலங்கரிக்கபட்டு நான்கு சக்கர வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இளைஞர்களின் குத்தாட்டத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற ஊர்வலத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்து தங்கள் செல்பொன்களில் படம் பிடித்தனர். கால்டக்ஸ் பகுதியில் ஊர்வலம் நிறைவடைந்து பூம்புகார் கடற்கரைக்கு எடுத்து சென்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.